கடவுள் வழிபாட்டுக்கு உருவம் இல்லாவிட்டால் நம்பிக்கை வராதா ?
கணக்கில் அடங்காத தெய்வங்களும் தேவர்களும் சிலைகளும் கோவில்களும் இருக்கும்போது நாம் எப்படி கடவுளை நெருங்க முடியும் ? நாம் எதிர்பார்ப்பது நடக்க வேண்டுமானால் கடவுளிடம் நாம் நெருங்கினால்தான் அது நடக்கும். அதற்கு குறைந்த பக்ஷம் இரண்டு விதிகள் உள்ளன : 1. கடவுள் அருகே செல்ல நமக்கு பயிற்சி அல்லது ஒரு கருவி வேண்டும். 2. கடவுளின் அனுமதி வேண்டும் (அவர் அருகில் நாம் செல்ல).
ஆனால் " எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனை (என்னுள்ளேயும் உங்களுள்ளேயும்) பிரார்த்திக்க இந்த இரண்டு விதியும் தேவையா" என கேட்டு யார் வேண்டுமானாலும் இந்த கருத்தை ஒரேயடியாக நமக்கு எதிராக செக் வைக்க முடியும் ! உண்மைதான். ஆதி சங்கரர் சொன்னதும் அதையேதான். ஆனால் இந்த விதி நமக்கு ஒரு உந்துகோல் போலதான். திருப்பதி மலையை நடந்து ஏறி போக முடியாதவர்கள் பஸ்சில் போவதில்லையா அது போலதான்.
இங்குதான் சங்கடம் ! எந்த கடவுளின் படத்தை கண் முன் வைப்பது ? நமது மதத்தில் ஆன்மீகத்தில் நிறைய தேவர்கள் இருக்கிறார்களே ? ஒன்று மட்டும் மனதில் வைப்போம். எல்லா தெய்வங்களும் சமகாலத்தில் உலா வரவில்லை. சுமார் பத்தாயிரம் வருஷங்களாக மாறி மாறி அவதாரங்கள் ஒவ்வொருவராக (ஸ்ரீராமனில் இருந்து, கிருஷ்ணரில் இருந்து) வந்துள்ளார்கள், சென்றுள்ளாளர்கள். கடவுள் என்று எதுவும் கிடையாது, ஆனால் தெய்வசக்தி உள்ளது. அந்த தெய்வசக்தியின் வடிவங்கள்தாம் அவதாரங்கள். பகவத் கீதையின் படி அந்த தெய்வசக்திக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. ஸ்ரீராமனையும் ஸ்ரீகிருஷ்ணனையும் யாரும் பார்த்ததில்லை. அவர்களது நிஜ உருவங்களும் யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு பிறகு பல அவதாரங்கள் வந்து மறைந்துள்ளனவே.
ஆகவே நமது காலத்தில் கண் கூடாக பல அவதாரங்களைப் பார்த்திருக்கிறோம். அதில் ஒன்றை தேடி எடுப்போம். அதற்கு நிச்சயமான உருவமும் உண்டு அதன் படமும் உண்டு. நமக்குப் பிடித்த அந்த உருவத்தை தினமும் நாம் கண் எதிரே கொண்டு வருவோம். பூஜை அறையில் நூறு படங்கள் இருக்கட்டும். அது வேண்டாம் என சொல்லவில்லை. ஏனென்றால் அவைகள் நாம் கண் எதிரே பார்த்த அவதாரங்களின் முன்னோர்கள் ! அது ஊற்றுக்கிணறு போல. ஆனால் நாம் தண்ணீர் பிடிப்பது ஓவர்ஹெட் தொட்டி அல்லது சம்பு போன்ற ஒன்றுதானே !
ஆகவே அந்த அவதாரத்தின் உருவத்தை நமது மனதில், சட்டைப் பாக்கெட்டில், பைகளில், எங்கெல்லாம் நாம் பார்க்கிறோமோ அங்கெல்லாம் நாம் கண் பார்வையில் அவர் இருக்கட்டும். எவ்வளவு அடிக்கடி அந்த உருவத்தை நாம் பார்க்கிறோமோ அவ்வளவு நாம் அவர் அருகில் சென்று விட்டோம் எனதான் அர்த்தம். நாம் பார்த்த இவர்தான் நமது குரு. அந்த குரு ஸ்ரீராமனையும் ஸ்ரீகிருஷ்ணரையும் பார்த்திருப்பதால் இவர் அவரிடம் நம்மை கொண்டு செல்வார்.
ஆகவே உருவவழிப்பாட்டை சரியான முறையில் பயன்படுத்தி ஆன்மீகத்தின் சக்தியையும் பலனையும் பெற இந்த மனோதத்துவ ரீதியான பயிற்சி அவசியம் என்பதை சுட்டிக் காட்டவே இந்த சிந்தனை. ஆனால் அதில் மிக முக்கியம் என்னவென்றால், நல்ல உருவ அமைப்பு கொண்ட ஒரு படம் அல்லது சிலையை ஒருமுறை தேர்ந்து எடுத்து விட்டால், கடைசி வரை அதையே பயன்படுத்த முடிந்தால்தான், ஒரே ஒரு உருவம் நாம் மனதில் நிரந்தரமாக இருக்கும், அது மிக அவசியம். சம்பந்தம் இல்லாத உதாரணம் என்றாலும் கூட (!) யோசித்துப் பாருங்கள்: (எத்தனையோ வேடங்களில் நடித்திருந்தாலும்) "ரஜினி", "கமல்" என அவர்கள் பெயரை நாம் கேட்க நேர்ந்தால் நம் மனதில் தோன்றும் உருவம் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அது போல கடவுள் உருவமும் இருக்க வேண்டாமா !
சரி முதல் விதி பூர்த்தி ஆகிவிட்டது. இரண்டாவது விதி ? சாய்பாபா சொல்வது போல உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு குணம் பிறவி குணமாக இருக்கிறது. மனிதனுக்கு அது சுயநலம் இல்லாத சமூக சேவை தான் என்று சொல்கிறார். அதை நாம் செய்து கொண்டு இருந்தால், இரண்டாவது விதியும் பூர்த்தி ஆகி விடாதா என்ன ?

